Sunday, January 5, 2020

கண்ணோட்டம்

காமராஜர் நகரில் வசிக்கும் சரோஜா மற்றும் வசந்தா எனும் இரண்டு பெண்மணிகள் ஒன்றாக கடைத்தெருவிற்கு சென்றனர். அங்கு தங்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளையும் வாங்கி கொண்டு வீடு திரும்பினர். அன்று கடை தெருவில் நடந்த விஷயங்களை பற்றி அவர் அவர்கள் வீட்டில் அந்த பெண்கள் தெரிவித்தனர். சரோஜா தன் குடும்பத்தினரிடம் வசந்தாவை பற்றி வினவினாள், அவள் இன்று காய்கறி வியாபாரம் செய்பவரிடம் பேரம் பேசி பொருளை வாங்கிய விதம் எனக்கு மிகவும் வேதனையை அளித்தது. ஓட்டலில் டிப்ஸ் தருகிறோம், பெரிய கடைகளில் கூறிய விலைக்கு அப்படியே பொருளை வாங்குகிறோம் ஆனால் தெருவில் வெயில் மழை பாராமல் விற்கும் வியாபாரிகளிடம் நாம் பேரம் பேசுகிறோம் என்று கூறி வருந்தினாள். மேலும் விநாயகர் சிலையை வாங்குவதிலும் சிக்கனம் செய்தாள், இன்று ஒருவர் எங்களிடம் கையேந்தி நின்றார் ஆனால் அவரை கண்டும் காணாமல் சென்று விட்டாள் என்று அனைவரிடமும் கூறி புலம்பினாள். வசந்தாவின் வீட்டில், சரோஜாவை பற்றியும் இன்று கடை தெருவில் பொருளின் விலையை விட அதிகமான பணத்தை அவள் அளித்தது பற்றியும் வசந்தா கூறி கொண்டு இருந்தாள். பணம் இருப்பவர்கள் இப்படி அள்ளி கொடுத்தால் பணம் இல்லாதவர்களிடத்திலும் வியாபாரிகள் இதையே எதிர்பார்பார்கள். பெறிய பெறிய கடைகளில் நல்ல வசதி உள்ளவர்கள் தான் வருவார்கள் அங்கு இப்படி நடப்பதால் பெறிய பாதிப்பு இல்லை ஆனால் ஏழை எளிய மக்கள் சென்று வியாபாரம் செய்யும் இடங்களில் நாம் இப்படி செய்தால் அது அவர்களையும் பாதிக்கும் என்று கூறி வருந்தினாள். மேலும் அவள் விலை உயர்ந்த வண்ண வண்ண ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலையை வாங்கினாள். அந்த காலத்தில் பெரியவர்கள் களி மண்ணால் ஆன விநாயகரை ஏரி குளங்களில் கரைத்தார்கள் அதற்கு காரணம்  ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணலை அடித்து சென்று விடும். இதனால் நிலத்தடி நீரும்  குறைந்து விடும் என்று யோசித்து ஆடி முடிந்து வரும் ஆவணி மாத சதுர்த்தியில் விநாயகரை களி மண்ணால் செய்து வழிபட்டு,சதுர்த்தி முடிந்து மூன்றாவது நாளில் ஆற்றில் கரைக்கும் வழக்கத்தை கொண்டு வந்தனர். ஏனென்றால் மண் ஈரப்பதமாக இருந்தால் ஆற்று நீரில் அடித்து சென்று விடும் என்பதால் மண் நன்றாக இறுகியவுடன் ஆற்றில் கரைத்தார்கள். இப்படி செய்வதால் கடினமான மண் நீரின் அடியில் படிந்து ஆற்று நீரை தக்கவைத்துக் கொண்டு நிலத்தடி நீரை உயர்த்திவிடும் என்று யோசித்து முன்னோர்கள் அப்படி செய்தனர். ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் இதை எல்லாம் யோசிக்காமல் ஆடம்பரத்திற்காக  வண்ண ரசாயணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் தண்ணீர் மாசுபடுவது மட்டும் இல்லாமல் எதிர்கால சந்ததியினர்க்கும்  தீங்கு விளைவிக்கின்றார்கள் என்று நினைக்கும் பொழுது மனம் பதைக்கின்றது.மேலும் இன்று ஒருவர் எங்களிடம் கையேந்தி நின்றார் அவர் அஜானுபாகுவாக இருந்தார். உழைத்து சாப்பிட வேண்டும் என்ற  எண்ணம் இல்லாமல் தன்னுடைய சோம்பேறித்தனத்தால் கையேந்துபவரை நாம் ஊக்குவிக்க கூடாது. வயதானவர்கள் ஊனமுற்றவர்களுக்கு செய்யலாம் ஆனால் இன்று சரோஜா அந்த மனிதருக்கு பணம் அளித்தது பிடிக்கவில்லை என்று புலம்பினாள். இதிலிருந்து  நம் பார்வையில் இருந்து தவறு என்று தெரியும் ஒரு விஷயம் மற்றவர்கள்  கண்ணோட்டத்தில்  எப்படி நினைக்கிறார்கள் என்று பார்க்க தவறுகிறோம். இருவரும் அடிப்படையில் நல்லவர்கள் தான் பார்க்கும் கண்ணோட்டம் வேறு, நல்ல நட்புடன் உள்ள இவர்கள் இதை பகிர்ந்து கொண்டிருந்தால் இருவரின் அனுகுமுறையும் ஒன்றாக மாறியிருக்கும். நமக்கு எதற்கு வம்பு நாம் சரியாக இருக்கிறோமா அது போதும் என்று பலர் நினைப்பதால் தான்  பல நல்ல விஷயங்கள் அழிந்துவிடுகிறது.

No comments:

Post a Comment